
பாகான், ஏப்ரல்-26- கெடா, சுங்கை பட்டாணியில் எரிவாயு தோம்பு வெடித்து கடுமையான தீப்புண் காயங்களுக்கு ஆளான பினாங்கைச் சேர்ந்த 2 சிறுமிகளுக்கு, தொடக்கக் கட்டமாக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தலா 2,000 ரிங்கிட் நிதியுதவி அளித்துள்ளது.
ஏப்ரல் 18-ஆம் தேதி சுங்கை பட்டாணியில் தங்கும் விடுதியொன்றில் அவர்களுக்கு அந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.
தற்போது பாகான் நிபுணத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் மருத்துவச் செலவுகளுக்கு அந்நிதி பயன்படுமென, அறவாரியத்தின் துணைத் தலைவரான செனட்டர் Dr லிங்கேஷ்வரன் கூறினார்.
இந்து அறப்பணி வாரியம் சார்பில் லிங்கேஷும், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனும் முன்னதாக அச்சிறுமிகளை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இருவருக்கும் முகம், கை, கால்களில் கடுமையான தீப்புண் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர்கள் ஏற்கனவே தந்தையை இழந்தவர்கள்; தாயாரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரு சகோதரிகளும் விபத்தில் சிக்கியிருப்பது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் இவர்களைப் பராமரிக்க ஆளில்லை என்ற கவலையையும் லிங்கேஷ் முன் வைத்தார்.
காப்புறுதி பாதுகாப்புப் பணம் 15,000 ரிங்கிட் மட்டுமே; அதுவும் முடியும் தருவாயில் உள்ளது.
எனவே தான், இந்து அறப்பணி வாரியம் சார்பில் அந்த சிறு தொகை வழங்கப்பட்டதாக Dr லிங்கேஷ் கூறினார்.
இரு சகோதரிகளும் சீக்கிரமே குணமடைந்து இச்சோதனையிலிருந்து மீண்டு வரவேண்டுமென்றும் பிராத்திப்போம் என்றார் அவர்.