
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை சண்டையை நிறுத்தும் விதமாக தாய்லாந்து – கம்போடிய அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா அதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு அப்பேச்சுவார்த்தைக்குத் தாம் தலைமையேற்கவிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்படும்; எனினும் உடனடி போர் நிறுத்தமே முக்கியமென்றார் அவர்.
சமாதானமாகப் போய் விடுமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அவ்விரு நாடுகளையும் அறிவுறுத்தியப் பிறகு, இந்த அமைதி பேச்சுவார்த்தை உதயமானது.
சீனாவும் அதனையே வலியுறுத்தியதாக அன்வார் சொன்னார்.
இணக்கத்திற்கு வருவது சற்று கடினம் தான் என்றாலும், வட்டார அமைதியை முன்னிறுத்தி பேச்சுவார்த்தையை வெற்றிப் பெறச் செய்ய மலேசியா தன்னால் ஆனதை செய்யுமென பிரதமர் கூறினார்.
தாய்லாந்து – கம்போடிய எல்லைச் சண்டைக்கு இரு தரப்பிலும் பொது மக்கள் உட்பட இதுவரை 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.