
கோலாலம்பூர், ஏப்ரல்-8 ஏப்ரல் மாத இறுதிக்குள் மலேசியா தனது அதிகாரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வரி குறித்து விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் அதனைத் தெரிவித்துள்ளார்.
சிறந்த புரிதலைப் பெறுவதற்கும் சிறந்த முடிவைக் காண்பதற்கும் சரியான வழியில் விவாதிக்க நாங்கள் அமெரிக்கா செல்வோம் என்றார் அவர்.
எனவே, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் அதிரடி அறிவிப்பு குறித்து மக்கள் பயப்பட வேண்டாம், நாங்கள் அதை சரியான வழியில் செய்வோம் என அமைச்சர் உறுதியளித்தார்.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற ஆசியான் முதலீட்டு மாநாட்டுக்கு வெளியே அவர் பேசினார்.
மலேசியா தொடர்ந்து வர்த்தகத்தை ஆராய்ந்து பன்முகப்படுத்த வேண்டும்; அதே சமயம், ஆசியானுக்குள் வலுவான ஒத்துழைப்பின் வாயிலாக, புதிய வர்த்தகப் பங்காளிகளைத் தேடுவதும், ஏற்கனவே உள்ளவர்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதும் முக்கியமென்றார் அவர்.
வசதியாகவே பழகி விட்ட நமக்கு சில நேரங்களில் ஒரு தூண்டுதல் தேவை; அது போலத் தான் இந்த கூடுதல் வரி விதிப்புமென அமீர் ஹம்சா சொன்னார்.
ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா வெவ்வேறு வரி விகிதங்களை விதித்திருந்தாலும், சுயேட்சை வாணிப முறையை ஏற்றுக்கொள்ளும் போக்கே, அக்கூட்டமைப்பை இன்னமும் ஒன்றிணைக்கும் பொதுவான அடிப்படை அம்சமாக விளங்குவதாக அவர் வருணித்தார்.
மற்ற ஆசியான் நாடுகள் போல, மலேசியாவும் தனது அதிகாரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வரி விகிதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகக் கூறியிருந்தார்.
ஏப்ரல் 3-ஆம் தேதி பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து அறிவிப்பு வெளியிட்ட டிரம்ப், மலேசியப் பொருட்களுக்கு 24 விழுக்காடு வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.