
கோலாலம்பூர், ஏப் 9 – நாடு முழுவதும் உள்ள முதலாளிகள், எந்தவொரு சட்டரீதியான விளைவுகளையும் எதிர்கொள்ளாமல், தாங்களாகவே முன்வந்து பெர்கேசோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் பதிவு செய்து பங்களிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இணங்கத் தவறியவர்கள் மீது நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று பெர்கேசோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ முகமது அஸ்மான் அஸிஸ் முகமட் ( Mohamad Azman Aziz Mohammad ) தெரிவித்தார்.
இந்த பொது மன்னிப்பு காலத்தை நாங்கள் வழங்கும் போதெல்லாம், பதிவுசெய்யப்பட்ட முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதோடு சில சமயங்களில் மொத்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறது என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம் என அவர் கூறினார்.
முதலாளிகள் அவர்களது தொழிலாளர்களை பெர்கேசோவில் பதிவு செய்ய முன்வருவதற்கு பொது மன்னிப்பு ஏன் வழங்க வேண்டும் என்பது எங்களுக்குப் புரியவில்லை.
தொழிலாளர்களின் நலன்தான் மிகவும் முக்கியம் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Mohammed Azman கூறினார். 2029 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆணடுவரை பெர்கேசோவில் தங்கள் நிறுவனங்களையும் ஊழியர்களையும் பதிவு செய்யத் தவறிய முதலாளிகளுக்கு மொத்தம் 11.91 மில்லியன் ரிங்கிட் அபராதத்திற்கான சம்மன்கள் வழங்கப்பட்டன.
ஏற்கனவே வழங்கப்பட்ட 15,922 நோட்டிஸ்களின் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பட்டது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 13,215 வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன, மேலும் பதிவுசெய்யப்பட்ட முதலாளிகள் கூட தொடர்ந்து பெர்கேசோவுக்கு பங்களிப்புகளைச் செய்வதில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான பெர்கேசோவின் புள்ளிவிவரங்களின்படி, 1969 ஆம் ஆண்டு பணியாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 1.64 மில்லியன் முதலாளிகள் உள்ளனர். ஆனால் 12 மாதங்களில் குறைந்தது ஒரு பங்களிப்புகளைச் செய்யும் முதலாளிகள் எண்ணிக்கை 641,631 மட்டுமே உள்ளது என அவர் விவரித்தார்.