ஜோகூர் பாரு, நவம்பர்-22 – எப்போதும் மற்றவர் படும் துன்பத்தில் தன்னை வைத்துப் பார்த்து, அதையே உந்து சக்தியாக்கி கடமையில் சாதித்து வருகிறார் ஜோகூரைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கர்ணன்.
தன்னிடம் வரும் ஒவ்வொரு விசாரணையையும் கடுமையாக எடுத்துக் கொள்ளும் அவர், ஒருவேளை அது தனக்கோ தன் குடும்பத்துக்கோ நடந்தால் என்னவாகும் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கி விடுகிறார்.
அதே வேகத்தில் காரியத்தில் இறங்கி, இடப்பட்ட பணியை பொறுப்பாகவும் விரைவாகவும் அவர் செய்து வருகிறார்.
அப்படி கர்ணன் முடித்துக் கொடுத்த முக்கியப் பணிக்காக, அண்மையில் அவருக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
ஆகஸ்டில் ஜோகூர் மூவாரில் வயதான தம்பதி மற்றும் அவர்களின் 11 வயது பேத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாதுர்யமாக செயல்பட்டு, முதன்மை சந்தேகப் பேர்வழியை கோலாலம்பூர் வரை பின்தொடர்ந்து வெறும் ஐந்தே நாட்களில் அவர் பிடித்துள்ளார்.
அதனை அங்கீகரிக்கும் வகையில் 39 வயது கர்ணனுக்கு, ஜோகூர் போலீசின் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பாராட்டும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன.
அந்நிகழ்வில் The Star-ரிடம் பேசிய கர்ணன், 14 ஆண்டு கால போலீஸ் வாழ்க்கையில் தான் சந்தித்த நெஞ்சை உருக்கும் எண்ணிலடங்கா சம்பவங்களில் அம்மூவரின் படுகொலை, ஒரு சின்ன உதாரணம் தான் என்றார்.
“சந்தேக நபர்கள் கைதாவதோடு நான் திருப்திப்படுவதில்லை; அவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் வரை என் மனம் அமைதியடையாது” என்கிறார் 2 பிள்ளைகளுக்குத் தந்தையான கடமைத் தவறா கர்ணன்.