கோலாலம்பூர், டிசம்பர்-23 – குடிக்க பானம் வாங்கிய போது ஐஸ்கட்டி வேண்டாம் எனக் கூறியதால், பிளாஸ்டிக் குவளையில் வெறும் கால்வாசி மட்டுமே நிரம்பிய பானம் வழங்கப்பட்ட அனுபவத்தை, டிக் டோக் பயனர் பகிர்ந்துள்ளது வைரலாகியுள்ளது.
@ariymadri என்ற டிக் டோக் கணக்கில் அவ்வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
ஐஸ் கட்டிகள் இல்லாமல் பானங்களை வாங்குவது தங்களது வழக்கம் என்ற நிலையில், அன்று கால் வாசி பானம் வழங்கப்பட்டது புதுமையாக இருந்ததாக அப்பெண் கூறினார்.
அதை கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அதற்குக் கடைப் பணியாளர்கள் கொடுத்த பதில்தான் ‘எரிச்சலை’ ஏற்படுத்தும் அளவுக்கு இருந்ததாக அவர் சொன்னார்.
“நீங்கள் தானே ஐஸ் கட்டி வேண்டாம் என்றீர்கள்? அப்பொழுது அப்படித்தான் இருக்கும்” என அலட்சியமாக பதில் வந்துள்ளது.
அவ்வீடியோ பதிவு, எதிர்பார்த்தபடியே வலைத்தளங்களில் சூடான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
ஐஸ் கட்டிகள் வேண்டாமெனக் கேட்டால், ஆர்டர் செய்யும் பானத்தின் அளவு சற்று குறைந்து காணப்படும் என்பது உண்மைதான்; ஆனால் அதற்காக வெறும் கால் வாசி பானத்தை கொடுப்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சமே என பலர் சாடினர்.
இவ்வேளையில், அக்கடையின் முன்னாள் பணியாளர் ஒருவரும் அப்பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார்.
ஐஸ் கட்டிகள் வேண்டாமென்றால் குறைவான அளவில் தான் பானங்கள் வழங்கப்படும்.
காரணம், அவை கையால் கலக்கப்படுவதில்லை; மாறாக இயந்திரத்திலிருந்து நேரடியாக ஊற்றப்படுகிறது.
அதன் இனிப்புத்தன்மையை ஈடுகட்ட ஐஸ்கட்டிகளை போட்டாக வேண்டுமென்றார் அவர்.
இந்த சம்பவம் பல சர்சைகளைக் கிளப்பி இணையவாசிகளிடையே பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.