
ஒபாமா தம்பதியரை ‘குரங்குகளாக’ காட்டும் வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை
வாஷிங்டன், பிப்ரவரி-7,
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், தனது Truth Social சமூக ஊடகத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா ஆகியோரை குரங்குகளாக காட்டும் காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ, 2020 அதிபர் தேர்தல் குறித்து தவறான குற்றச்சாட்டுகளை பரப்பும் நீளமான பதிவின் ஒரு பகுதியாகும்.
எனினும் இப்பதிவு இனவெறி மற்றும் அவமதிப்பானது என அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சித் தலைவர்களோடு, ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரும் இச்செயலை விமர்சித்துள்ளனர்.
எதிர்ப்புகள் அதிகரிக்கவே, வெள்ளை மாளிகை தற்போது அவ்வீடியோவை நீக்கியுள்ளது.
நீளமான வீடியோவான அதனை பதிவேற்றுவதற்கு முன் ட்ரம்போ அல்லது அலுவலகப் பணியாளர்களோ முழுவதுமாகப் பார்க்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை மழுப்பியுள்ளது.
முன்னதாக, இதே வெள்ளை மாளிகை தான் இது ஒரு சாதாரண இணைய மீம் (meme) மட்டுமே என்றும், முன்வைக்கப்படும் விமர்சனங்கள் சற்றே ‘மிகைப்படுத்தப்பட்டவை’ என்றும் கூறி சமாளித்தது குறிப்பிடத்தக்கது.
என்றாலும், அமெரிக்க இணையவாசிகள் அதை ஏற்கவில்லை; மக்களை ஒன்றிணைக்க வேண்டிய இடத்தில் உள்ள அதிபரே இதுபோன்ற பிரிவினை அம்சங்களை ஊக்குவிப்பது முறையல்ல என கண்டனங்கள் குவிகின்றன.
கருப்பினத்தவர்களை குரங்குகளுடன் தொடர்புப்படுத்தி கிண்டல் செய்வது மேலை நாடுகளில் காலங்காலமாக உள்ள பழக்கமாகும்.



