
செர்டாங்கள்,ஜன.11- செர்டாங் மருத்துவமனையல் 17 மணிநேரத் தீவிரப் பணியின் மூலம் 48 ‘ஸ்டென்ட்’ (stent) அறுவை சிகிச்சைகளைச் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்காக ம.இ.கா வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்தெரிவித்துக் கொள்வதாக அதன் ஊடகப் பிரிவு தலைவர் எல்.சிவசுப்ரமணியம் கூறினார்.

இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்திற்கான முதன்மை இதயச் சிகிச்சை மையமாகும்.
செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் இதயவியல் துறை, 17 மணிநேரத் தீவிரச் செயல்பாட்டின் மூலம் ஒரே நாளில் 76 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து புதிய மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இதில் 48 ஸ்டென்ட் சிகிச்சைகளும் அடங்கும் என்று இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் அஸ்ரி ரங்கா அப்துல்லா ரமையா கூறினார்.
பொதுவாக இந்த மருத்துவமனை ஒரு நாளைக்கு 50 முதல் 70 இதயச் சிகிச்சைகளைக் கையாளும் என்றும், தற்போது 76 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தது இதுவரை பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கைகளில் ஒன்று என்றும் தெரிவித்தார்.
மருத்துவமனையிலுள்ள ஏழு ஆஞ்சியோகிராம் (angiogram) இயந்திரங்கள் மூலம் இதய அடைப்புகளைக் கண்டறிய முடிவதே இவ்வளவு அதிகமான சிகிச்சைகளைக் கையாள முடிந்ததற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
அடுத்த ஒரு ஆண்டுக்குள் மேலும் இரண்டு இயந்திரங்களைச் சேர்க்க மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
“ஒரே நாளில் 48 ஸ்டென்ட் சிகிச்சைகள் செய்யப்பட்டது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
“நல்வாய்ப்பாக, நோயாளிகள் எவரும் உயிரிழக்கவில்லை. சில அவசர சிகிச்சைகளில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோதிலும், ஒரு நோயாளிக்கு ஸ்டென்ட் வைப்பதற்கு முன்னதாக இதயத் துடிப்பு மீட்புச் சிகிச்சை (CPR) தேவைப்பட்ட நிலையிலும், அனைத்து நோயாளிகளும் உயிர் பிழைத்தனர்,” என்று டாக்டர் அஸ்ரி ரங்கா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 1 மணி வரை தொடர்ந்து பணியாற்றிய இந்த மருத்துவக் குழுவில் கிட்டத்தட்ட 100 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ரேடியோகிராஃபர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
சிகிச்சை அளிக்கப்பட்ட 76 நோயாளிகளில், 26 பேர் கோலாலம்பூர், கோலா பிலா, சிரம்பான் மற்றும் சைபர்ஜெயா உள்ளிட்ட ஏழு அரசு மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட அவசர கால நோயாளிகள் ஆவர்.
சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான முதன்மையான இதயச் சிகிச்சை மையமாக இந்த மருத்துவமனை விளங்குவதாகவும், மற்ற மாநிலங்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்தும் வரும் நோயாளிகளைத் தாங்கள் கையாளுவதாகவும் டாக்டர் அஸ்ரி மேலும் தெரிவித்தார்.
டாக்டர் அஸ்ரி தலைமையிலான மருத்துவ குழுவின் இந்த சாதனைக்கு ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் ஒட்டு மொத்த ம.இ.காவின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக ம.இ.கா ஊடகப்பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்ரமணியம் குறிப்பிட்டார்.



