ஒற்றுமைப் பொங்கல், சுவாமி மண்டபம் திறப்பு, திருப்புகழ் நூல் வெளியீடு; முப்பெரும் நிகழ்வால் களைக் கட்டிய பத்து மலை

பத்து மலை, ஜனவரி-18-2026 பொங்கல் பண்டிகையை ஒட்டி பத்து மலை திருத்தலத்தில் நேற்று தேசிய ஒற்றுமைப் பொங்கல் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பாரம்பரியமும் கலாச்சாரமும் மணம் கமழும் வகையில் 15 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
அவற்றில், 14 பானைகள் நாட்டின் 14 மாநிலங்களைக் குறிக்கும் வகையிலும், 15-ஆவது பானை மலேசியாவைக் குறிக்கும் வகையிலும் சிறப்பாக பொங்கல் வைக்கப்பட்டது.
காலையில் கோலாட்டம், மயிலாட்டம், உறுமி மேளம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை என பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பின்னர் பூக்கட்டுதல், மெது சைக்கிளோட்டம், உரி அடித்தல், தோரணம் பின்னுதல், குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பொங்கல் போட்டிகளும் நடைபெற்றன.
வெற்றிப் பெற்றவர்களுக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலரும், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவருமான டத்தோ என். சிவகுமார் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்தோடு பங்கேற்றது உற்சாகத்தை அதிகரித்ததாக சிவகுமார் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
முன்னதாக, மாற்றுத் திறனாளிகளுக்கும் முதியோருக்கும் மேல்குகை முருகப் பெருமானின் அருளாசிக் கிடைக்க ‘தமிழன் உதவும் கரங்கள்’ தொண்டூழியம் நடைபெற்றது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே அவர்களை சக்கர நாற்காலிகளில் வைத்து தன்னார்வலர்கள் மேலே தூக்கிச் சென்றனர்.
தங்களுக்கும் முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்ததை எண்ணி அவர்களில் பலர் நெகிழ்ச்சியடைந்தனர்.
டத்தோ சிவகுமார், அவர்களுக்கு சிறு பண அன்பளிப்பையும் வழங்கினார்.
ஒற்றுமைப் பொங்லோடு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுவாமி மண்டபம் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நூல் வெளியீடும் என முப்பெரும் நிகழ்வாக நேற்றைய விழா களைக் கட்டியது.
திறப்பு விழாவையும் நூல் வெளியீட்டையும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமைத் தாங்கி நடத்தி வைத்தார்.
புதிய மண்டபம் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் நல்ல வசதியைக் கொடுக்குமென நடராஜா நம்பிக்கைத் தெரிவித்தார்.
சிறப்புப் பிரமுகராக ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கலந்துகொண்டார்.
திருப்புகழ் நூலை தான் ஸ்ரீ நடராஜா வெளியிட, டத்தோ ஸ்ரீ சரவணண் 10,000 ரிங்கிட் கொடுத்து முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.
இதுபோன்ற சமய நூல்கள் வெளியீட்டின் மூலம், அடுத்தத் தலைமுறைக்கு வரலாற்றை முறையாகப் பதிவுச் செய்ய வேண்டும் என சரவணன் தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில் மஹிமாவில் புதிதாக 28 ஆலயங்களும் இந்து அமைப்புகளும் பதிந்துக் கொண்டுள்ளதாகவும் டத்தோ சிவகுமார் தெரிவித்தார்.
மொத்தத்தில் இந்த 2026 பொங்கல் பண்டிகையை, நேற்றைய முப்பெரும் நிகழ்வு மேலும் மெருகூட்டியது.
நமது சமயம்-கலை-கலாச்சார-பாரம்பரிய அம்சங்களைக் கட்டிக் காக்கும் முயற்சிகளை பெருமையோடு வெளிக்காட்டியது.



