தெமர்லோ, செப்டம்பர் -13 – ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள முஸ்லீம் அல்லாத தலைவர்கள் தலைகனத்தோடு நடந்துக் கொள்வதாக பாஸ் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர்களைக் கட்டுப்படுத்தும் திராணி, UMNO, PKR, AMANAH ஆகிய மூன்றுக்குமே கிடையாது.
அந்த அளவுக்கு அக்கட்சிகள் பலவீனமாக இருப்பதாக ஹாடி குற்றம் சாட்டினார்.
பெயருக்குத் தான் அவை மலாய்-முஸ்லீம் கட்சிகளாக இருக்கின்றன.
ஆனால் இஸ்லாத்தின் புனிதத்தன்மை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னின்று குரல் கொடுக்காமல் அவை பின்வாங்குவதாக, மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் காட்டமாகக் கூறினார்.
ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் DAP நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் பேசிய பேச்சை, அரசாங்கத்திலுள்ள மலாய் தலைவர்கள் கண்டிக்கவில்லை.
பார்க்கப் போனால், இஸ்லாம் தொடர்பான விவகாரங்கள் குறித்து கேள்வியெழுப்பும் முஸ்லீம் அல்லாத தலைவர்களுடன், மலாய் கட்சிகள் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என ஹாடி சொன்னார்.
பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டில் பேசிய போது ஹாடி அவாங் அவ்வாறு கூறினார்.