Latestமலேசியா

ஒற்றுமை அரசாங்கத் தலைவர்களுக்கிடையில் சச்சரவுகள் வேண்டாமென்ற இணக்கம் என்னவானது? புவாட் சர்காசி கேள்வி

கோலாலம்பூர், அக்டோபர்-17 – ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பொது வெளியில் விமர்சனம் செய்து கொள்ள வேண்டாமென்ற இணக்கம் என்னவானது என, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ Dr மொஹமட் புவாட் ச’ர்காஷி (Datuk Dr Mohd Puad Zarkashi ) கேள்வியெழுப்பியுள்ளார்.

அந்த இணக்கம் காற்றில் பறந்துபோய் விட்டதா என அவர் காட்டமாக கேட்டார்.

பிரதமரின் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டார் மொஹமட் அகின் (Shamsul Iskandar Mohd Akin) வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்னமும் மௌனம் காப்பதைப் பார்த்தால், அப்படித்தான் தெரிகிறது.

அவரின் அந்த மௌனம், மடானி அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மாறி மாறி சாடிக் கொள்வதற்கு சம்மதம் வழங்குவதற்கு சமம் என, ச’ர்சாஷி கூறினார்.

உண்மையில், ஷம்சுலின் கருத்தால் அவப்பெயர் வந்திருப்பது என்னமோ பிரதமருக்குத் தான்; அம்னோவுக்கு அதில் இழப்பேதும் இல்லை என்றார் அவர்.

15-வது பொதுத் தேர்தலில் பேராக், பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியிடம் தோல்வி கண்டதை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கை கோர வேண்டாமென, தமக்கு உத்தரவிடப்பட்டதாக ஷம்சுல் அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தார்.

அது ஏமாற்றத்தை அளித்தாலும், கட்சித் தலைமைக்குத் தாம் கட்டுப்பட்டதாக, podcast நேர்காணலில் அவர் சொன்னார்.

பக்காத்தான் ஹராப்பானும், தேசிய முன்னணியும் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கப் போவதாக உத்தரவாதம் கிடைத்ததும், அம்முடிவுக்குக் காரணமென ஷம்சுல் கூறினார்.

ஆனால் அவரின் அப்பேச்சு அம்னோ மட்டுமின்றி ஷம்சுலின் சொந்த கட்சியான பிகேஆரிடமிருந்தும் கண்டனத்தைப் பெற்றது.

ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து ஈராண்டுகளை நிறைவுச் செய்யும் இந்நேரத்தில் எதற்காக அவர் பழையதை கிளற வேண்டுமென, குறைக்கூறல்களை ஷம்சுல் எதிர்கொண்டு வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!