
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-14- இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், ஒழுங்கீனமான 82,076 உள்ளடக்கங்களை நீக்குமாறு சமூக ஊடக சேவை வழங்குநர்களிடம், மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC விண்ணப்பித்துள்ளது.
அவையனைத்தும் MCMC விதிமுறைகளை மீறிய உள்ளடக்கங்கள் என, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
பயனர்களுக்கு ஒழுங்கீனச் சேவைகளை வழங்கும் செயலிகள் சமூக ஊடகங்களில் இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் சொன்னார்.
இது சட்டத்திட்டங்களுக்கு எதிரானது என்பதோடு, மக்களின் மனநலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது; சில சமயங்களில் சமூக சீர்கேட்டுக்கு வித்திட்டு பயனர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
எனவே, அத்தகைய உள்ளடகங்களை நீக்குமாறு MCMC கோரியுள்ளது; என்றாலும் அவற்றை நீக்குவதும் நீக்காமல் விடுவதும், அந்தந்த சமூக ஊடகங்கள் வரையறுத்துள்ள சமூக வழிகாட்டிகளின் அடிப்படையில் முடிவாகும்; அதாவது இறுதி முடிவை சமூக ஊடக சேவை வழங்குநர் தான் எடுக்க வேண்டும் என்றார் அவர்.
சமூக ஊடகங்கள் தவிர்த்து, Google Play, Apple Store போன்ற தளங்களில் வழங்கப்படும் அந்த ஒழுங்கீனச் சேவைகளைத் தணிக்கை செய்யவும், முடக்கவும் MCMC நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஃபாஹ்மி கூறினார்.