
லாஸ் ஏஞ்சலஸ், மார்ச்-26- விமானிகளில் ஒருவர் கடப்பிதழை மறந்து வைத்து விட்டதால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸிலிருந்து சீனாவின் ஷங்ஹாய் புறப்பட்ட யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் பாதியிலேயே திரும்ப வேண்டியக் கட்டாயத்திற்கு ஆளானது.
அந்த UA 198 விமானம் மார்ச் 22-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஷங்காய் புறப்பட்டது.எனினும் சில மணி நேரங்களிலேயே விமானத்தை திருப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் சான் ஃபிரான்சிஸ்கோவில் விமானம் தரையிறங்கியது.
பிறகு மாற்று விமானி ஏற்பாடு செய்யப்பட்டு அன்றிரவு 9 மணிக்கு இலக்கை நோக்கி பயணம் தொடர்ந்தது.
அசல் அட்டவணையைக் காட்டிலும் 6 மணி நேரங்கள் தாமதமாக விமானம் ஷங்ஹாய் சென்றடைந்தது.
பயணிகளுக்கு உணவுப் பற்றுச்சீட்டுகளும் இழப்பீடும் வழங்கப்பட்டன.
இந்த விமானம் தாமதமானதால், ஷங்ஹாயிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் புறப்பட வேண்டிய விமானமும் தாமதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.