
கோலாலம்பூர், ஏப் 23 – அண்மையில் கடுமையான மழையைத் தொடர்ந்து, குறுகிய நேரத்தில் கால்வாய்களில் நீர்மட்டம் நிறைந்து வெளியேறியதால் தலைநகரைச் சுற்றியுள்ள பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
தற்போதுள்ள வடிகால் அமைப்பு அதிகப்பட்ச திறனில் இயங்குவதையும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் கண்டறிந்துள்ளது. ஆற்று நீர் நிரம்பி வழிந்ததால் நிலைமை மோசமடைந்தது, இதனால் சுற்றியுள்ள வடிகால் அமைப்பிற்குள் நதி நீர் நுழைவதைத் தடுக்க வெள்ள தடுப்பு அமைப்பு இலயல்பாகவே மூடிக்கொண்டது.
எனினும் கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL தனது குத்தகையாளர்களால் குப்பைகள், காய்ந்த இலைகள், மணல் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை சுத்தம் செய்ததன் மூலம் உடனடி நடவடிக்கை எடுத்தது. அதோடு சம்பந்தப்பட்ட இடங்களில் சி.சி.டி.வி கேமரா மூலம் தீவிரமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
விரைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, தேங்கி நின்ற நீர் 30 முதல் 40 நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக முழுமையாக வெளியேற்றப்பட்டது.
இதனால் எவருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் தெரிவித்துள்ளது.
நேற்றைய நீர் பெருக்கத்தால் ஜாலான் சுல்தான் , ஜாலான் டிராவர்ஸ்ஸிலிருந்து ஜாலான் டமன்சாராவுக்கு வெளியேறும் சாலை, ஜாலான் கூச்சிங், ஜாலான் சிகாம்புட்டில் Masjid Ubudiah வுக்கு அருகேயுள்ள இடங்களும் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு, வடிகால் அமைப்பு மற்றும் நீர் வெளியேற்றங்களை மேம்படுத்துவதுடன் , வழக்கமான வண்டல் மண் அகற்றுவது உட்பட பல்வேறு தொடர் நடவடிக்கைகளை DBKL எடுத்து வருகிறது