கோலாலம்பூர், டிசம்பர்-20, உரிமைக் கட்சியின் பதிவு அலைக்கழிக்கப்படுவதால், அதன் நிர்வாகம் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது.
அக்கட்சியைப் பதிவுச் செய்யும் விண்ணப்பம் கடந்த ஜூலை 2-ஆம் தேதி RoS எனப்படும் சங்க பதிவிலாகாவால் நிராகரிக்கப்பட்டது.
அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தே நேற்றோடு ஐந்து மாதங்கள் ஆகி விட்டன.
ஆனால், RoS-சிடமிருந்தோ KDN எனப்படும் உள்துறை அமைச்சிடமிருந்தோ இதுவரை பதிலேதும் வரவில்லை.
எனவே, நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என, உரிமைக் கட்சியின் இடைக்கால நிர்வாகத்தின் செயலாளர் சத்தீஸ் முனியாண்டி கூறினார்.
அவ்வகையில், நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் RoS மற்றும் KDN-னுக்கு எதிராக உரிமைக் கட்சி சார்பில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது.
உரிமைக் கட்சியைப் பதிவுச் செய்யுமாறு RoS-சை நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; அல்லது அக்கட்சி செய்துள்ள மேல்முறையீடு தொடர்பில் உள்துறை அமைச்சர் உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென ஆணையிட வேண்டுமென, அவ்வழக்கு மனுவில் உரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரசியல் கட்சிப் பதிவென்பது, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையாகும்.
எனவே, கட்சிப் பதிவை அரசாங்கம் இழுத்தடித்தாலும், நீதிமன்றம் சரியானத் தீர்ப்பை வழங்கி நியாயத்தை நிலைநாட்டுமென சத்தீஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
உரிமைக் கட்சியின் மனு கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஜனவரி 27-ஆம் தேதி செவிமெடுப்புக்கு வருகிறது.