
கோலாலம்பூர், மே-22 – கட்டாய பணி ஓய்வு பெறும் வயதை 60-திலிருந்து 65-தாக உயர்த்தும் பரிந்துரை பரிசீலிக்கப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் அப்பரிந்துரையை முதலில் நன்காராயும்; பின்னர் அமைச்சரவையில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுமென்றார் அவர்.
நிதி நிலைமை, மக்கள் தொகை, புதிய வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் அதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
எனவே, அவர்கள் முதலில் ஆராயட்டும்; பின்னர் முடிவெடுப்போம் என பிரதமர் சொன்னார்.
60 வயது என்பது இன்னமும் ஓடியாடி வேலை செய்யக் கூடிய வயதே; உற்பத்தி ஆற்றலும், வேலைச் சந்தைக்கு பங்களிக்கும் தெம்பும் உள்ள வயதே.
எனவே, கட்டாய பணி ஓய்வுப் பெறும் வயதை 60-திலிருந்து 65-துக்கு உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென, பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட் முன்னதாக கூறியிருந்தார்.
மலேசியாவில் அரசாங்க ஊழியர்களுக்கான கட்டாய பணி ஓய்வுப் பெறும் வயது 60 ஆகும்.
தனியார் துறையினரும், 2012 பணி ஓய்வுச் சட்டத்தின் கீழ் அதே வயது வரம்பைப் பின்பற்றுகின்றனர்.