கோலாலம்பூர், நவம்பர்-30, கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு, இனி சமூகச் சேவைத் தண்டனைக் காத்திருக்கிறது.
KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) அதனை அறிவித்துள்ளார்.
KPKT முன்வைத்த பரிந்துரையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டிப்பதால், அடுத்தாண்டு மார்ச் மாதம் அது தொடர்பான சட்டத் திருத்தம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
வளர்ச்சி அடைந்த நாடாக உருவாவதை நோக்கி மலேசியா பயணித்தாலும், சிறு சிறு குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னமும் காணப்படுகிறது.
எனவே, அவர்களுக்கு ஒரு பாடமாக விளங்கும் வகையிலும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த சமூகச் சேவைத் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சிறப்பு ஜேக்கேட் அணிந்து, நிர்ணயிக்கப்பட்ட மணி நேரங்களுக்கு தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும்.
குப்பைகளை வீசுவோரை அடையாளம் காண குறிப்பிட்ட இடங்களில் CCTV கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமென்றும் அமைச்சர் சொன்னார்.
நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற KPKT அமைச்சின் ஊடக விருதளிப்பு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய போது ஙா கோர் மிங் அத்தகவலைப் பகிர்ந்தார்.