ஒட்டாவா, நவம்பர்-14, கனடாவில் தெஸ்லா மின்சார கார் விபத்துக்குள்ளாகி தீப் பிடித்ததில், இந்தியர்கள் நால்வர் உடல் கருகி பலியாயினர்.
வேகமாக சென்றுகொண்டிருந்த போது சாலைத் தடுப்புச் சுவரை கார் மோதியதில் அவ்விபத்து ஏற்பட்டது.
மோதிய வேகத்தில் காரில் தீப்பற்றியது.
அப்போது அவ்வழியே சென்ற ஓர் ஆடவர், இரும்புக் கம்பி உதவியால் காரின் ஒரு பக்க கண்ணாடியை உடைத்து உள்ளேயிருந்த 20 வயது பெண்ணைக் காப்பாற்றினார்.
ஆனால் காருக்குள் கரும்புகை சூழ்ந்திருந்ததால், மேலும் 4 பேர் உள்ளே உயிருக்குப் போராடுவதை அவர் கவனிக்கவில்லை.
கடைசியில் அந்நால்வரும் தீயில் கருகி மாண்டனர்.
சம்பவத்தின் போது கார் அதிவேகத்தில் சென்றதை உறுதிப்படுத்தி கனடிய போலீஸ், விபத்துக்கான உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றது.
தெஸ்லா கார்களில் வழக்கமான கதவுகள் போல் அல்லாமல், மின்னியல் முறையில் செயல்படும் கதவுகளே பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் விபத்துகளின் போது மின்சாரத் தடை ஏற்பட்டு கதவுகள் செயலிழந்து விடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சிக்கிய தெஸ்லா Y வகை மாடல் கார்கள் மீது கனடிய நெடுஞ்சாலை பாதுகாப்புத் தரப்பு ஏற்கனவே 9 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.