
கோலாலம்பூர், செப் 11 – கோலாலம்பூர் , கம்போங் சுங்கை பாருவில் இன்று வீடுகளை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள குடியிருப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் Dang Wangi போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சுலிஸ்மி எப்பென்டி சுலைமான் ( Sulizmie Affendy Sulaiman ) காயமடைந்தார்.
அந்தப் பகுதிக்குள் நுழைய முயன்ற குடியிருப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, Sulizmie இரத்தக்கறை படிந்த முகத்துடன் காணப்பட்டார்.
முன்னதாக, கம்போங் சுங்கை பாரு மறுசீரமைப்புத் திட்டத்தை எளிதாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை, பதட்டமான குடியிருப்பாளர்களை அந்தப் பகுதிக்குள் நுழையத் தூண்டியதால் அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸ்காரர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதிகாலையில் இருந்தே குடியிருப்பாளர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.
காலை 10 மணியளவில், தங்களது பிரதிநிதியின் தொடர்ச்சியான உரைகளைத் தொடர்ந்து, குடியிருப்புவாசிகள் அந்தப் பகுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனர்.
இருப்பினும், கடமையில் இருந்த போலீசார் அவர்களை அவ்வாறு செய்வதைத் தடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து கலகத் தடுப்பு போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டனர்.
சில குடியிருப்பாளர்கள் அப்பகுதியை காலி செய்ய மறுத்துவிட்டதால் மறுவடிவமைப்பு பணிகளை பாதிக்கும் வகையில் அங்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது.