கம்போடியாவுடனான போர் நிறுத்தம் ‘வாபஸ்’; அமெரிக்காவுக்கு தாய்லாந்து விளக்கம்

பேங்கோக், நவம்பர்-11,
கம்போடியாவுடனான எல்லை தகராற்றை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கடந்த மாதம் கையெழுத்திட்ட மேம்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை, தாய்லாந்து அதிரடியாக நிறுத்தியுள்ளது.
இம்முடிவை அமெரிக்காவுக்கு விளக்கவுள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் கோலாலாம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன் படி இரு நாடுகளும் எல்லைப் பகுதியிலிருந்து கனரக ஆயுதங்களை அகற்றவும், 18 கம்போடியப் போர்க் கைதிகளை விடுவிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தன.
ஆனால், எல்லைப் பகுதியில் அண்மையில் நிலைமை மோசமடைந்தது.
தாய்லாந்து படையினர் 4 பேர் கன்னிவெடியில் சிக்கி காயமடைந்ததைத் தொடர்ந்து, கம்போடியா புதிய கன்னிவெடிகளைப் பதித்ததாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது.
அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள கம்போடியாவோ, அது பழைய வெடிமருந்து என விளக்கம் அளித்தது.
இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் பதற்றம் மூண்டிருப்பதால், தாய்லாந்து தனது அமைதி நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, அமெரிக்கா மற்றும் ஆசியான் தலைவராக இருந்து அமைதி முயற்சிகளை முன்னெடுத்த மலேசியாவுக்கும் விளக்கம் அளிக்கவுள்ளது.



