
கோலாலாம்பூர், நவம்பர் 19-ஆவண மோசடி சர்ச்சையால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஹரிமாவ் மலாயாவின் 7 ‘கலப்பு மரபின’ கால்பந்து வீரர்களுக்கும் மலாய் மொழி பேசத் தெரியாது.
அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA அந்த அதிர்ச்சித் தகவலை அம்பலப்படுத்தியுள்ளது.
இருந்த போதிலும், எப்படியோ, மலேசிய கால்பந்து சங்கமான FAM கூறியது போல், அவர்கள் தங்கள் குடியுரிமை விண்ணப்பத்திற்குத் தேவையான மலாய் மொழி சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
FIFA மேல்முறையீட்டுக் குழுவின் ஆவணத்தில் இடம்பெற்று, நேற்று முதல் வைரலாகியுள்ள 3 கடுமையான குற்றச்சாட்டுகளில் இதுவும் அடங்கும்.
இவ்வேளையில், தனது செயலகத்தின் சில பணியாளர்கள் அந்த 7 வீரர்களின் வெளிநாட்டு பிறப்புச் சான்றிதழ்களில் “நிர்வாக மாற்றங்களை” செய்ததை FAM ஒப்புக்கொண்டுள்ளதாகவும் FIFA தெரிவித்துள்ளது.
மலேசிய அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களுக்காகக் காத்திருக்கும்போது நேர அழுத்தத்தின் கீழ் இந்த ‘மாற்றங்கள்’ செய்யப்பட்டனவாம்.
இந்த மாற்றங்கள் அதன் நிர்வாகக் குழு அல்லது பொதுச் செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரஹ்மானுக்குத் தெரியாமல் அல்லது ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டதாக FAM கூறிக்கொண்டதாகவும் FIFA தெரிவிக்கிறது.
ஆவண மோசடியில் சிக்கிய 7 வீரர்களும், இந்த திருத்தங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் FAM கூறியுள்ளதாம்.
அந்த உலகக் கால்பந்து அமைப்பின் மேல்முறையீட்டுக் குழு, FAM மற்றும் அந்த 7 வீரர்கள் மீதான தடைகளையும் உறுதிச் செய்யும் தனது எழுத்துப்பூர்வ தீர்ப்பில் இவ்விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
இப்படி இந்த ஆவண விவகாரத்தில் FAM பற்றியும் நடந்த நிர்வாகக் கோளாறுகள் பற்றியும் FIFA உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்திருப்பது, மலேசியக் கால்பந்து இரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



