கலைநிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்களுக்குக் கட்டாய சிறுநீர் பரிசோதனை இல்லை – ஃபாஹ்மி

கோலாலம்பூர், மார்ச்-3 – கலைநிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்களுக்கு சிறுநீர் பரிசோதனைகளைக் கட்டாயமாக்கும் திட்டமேதும் தற்போதைக்கு இல்லையென, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியுள்ளார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில், அவ்வப்போது SOP நடைமுறைகளில் ஏதேனும் பரிந்துரைகள் மற்றும் மாற்றங்களின் தேவை குறித்து அரசாங்கம் ஆராயும் என அவர் சொன்னார்.
வெளிநாட்டு கலைஞர்களை உட்படுத்திய தேவையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வழிகாட்டுதல்களை, தனது அமைச்சு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் ஃபாஹ்மி கூறினார்.
நிகழ்ச்சிக்கு முன், நிகழ்ச்சியின் போது மற்றும் நிகழ்ச்சிக்குப் பிறகு புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் உட்கொள்வது தொடர்பான எந்த நடவடிக்கைகளும் இல்லை என்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதிச் செய்ய வேண்டும் என்பதும் அவற்றிடலங்கும்.
போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்காக கலைநிகழ்ச்சிகளுக்கு வருபவர்களுக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தும் திட்டம் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஃபாஹ்மி பதிலளித்தார்.
போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கட்டாய சிறுநீர் பரிசோதனைகளை ஒரு SOP விதிமுறையாகக் கொண்டு வர வேண்டுமென, சிலாங்கூர் மாநில அரசு, ஜனவரி 7-ஆம் தேதி பரிந்துரைத்திருந்தது.
சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நடைபெற்ற Pinkfish இசைநிகழ்ச்சியில், போதைப் பொருள் உட்கொண்டதால் நால்வர் உயிரிழந்ததை அடுத்து அப்பரிந்துரை முன்வைக்கப்பட்டது.