
கலைப் பயண பொன்விழாவில் நடிகர் ராதாரவிக்கு மலேசியாவில் கலைச் செம்மல் விருது
செலாயாங், பிப்ரவரி-13,
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான கலைமாமணி ராதாரவி யின் 50 ஆண்டுகால கலைப்பயணப் பொன்விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது.
மலேசிய இந்திய விளையாட்டு மன்றமான SUKIM தலைவர் டத்தோ டி. மோகன் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
செலாயாங், செங்கா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அவ்விழாவுக்கு ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையேற்று, ராதாரவிக்கு கலைச் செம்மல் விருது வழங்கி கெளரவித்தார்.
“ஒருவர் வாழும்போதே வாழ்த்த வேண்டும், அதுவே திறமைக்கு உண்மையான அங்கீகாரம்” என சரவணன் தமதுரையில் வலியுறுத்தினார்.
ராதாரவி மலேசிய – இந்தியக் கலைஞர்களுக்கு உறவுப் பாலமாக இருந்ததன் அடிப்படையில், அவரின் கலைச் சேவையைப் பாராட்டும் வகையில் மலேசியாவில் பொன் விழா கொண்டாடப்பட்டதாக டத்தோ மோகன் சொன்னார்.
நடிகவேள் எ.ஆர். ராதாவின் மகனுமான ராதாரவிக்கு, கடல் கடந்து மலேசியாவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது, அதுவும் பொன்விழா ஆண்டில் இது நடந்திருப்பது பெருமையளிப்பதாக, சென்னை முன்னாள் மேயர் ‘கராத்தே’ தியாகராஜன் கூறினார்.
வழக்கமாக தமிழகத்தில் கதாநாயக அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கே பொன் விழா எடுப்பார்கள்.
ஆனால், வில்லன் குணசித்திர நடிகரான தமக்கு பொன் விழா அதுவும் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியைத் தருவதாக ராதாரவி சொன்னார்.
திரையில் பார்த்து வியந்தவருக்கு, நம்மூரில் பொன் விழா நடத்திய ஏற்பாட்டுக் குழுவுக்கு வந்திருந்தோரில் பலர் பாராட்டுத் தெரிவித்தனர்.
கலைக் குடும்பத்திலிருந்து வந்து 50 ஆண்டுகள் ஆன ராதாரவிக்கு, வாழ்நாளில் எத்தனையோ விருதுகள் வழஙப்பட்டிருந்தாலும், மலேசியாவில் இந்த விருது வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



