
ஸ்கூடாய், நவம்பர் 17-“வெளிநாட்டு கலாச்சார அம்சங்கள்” கொண்ட குழுக்களை தடைச் செய்யும் சுற்றறிக்கைக்கு பரவலாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, UTM எனப்படும் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் தனது கொள்கையை விளக்கியுள்ளது.
தாங்கள் குறிப்பிட்ட ‘வெளிநாட்டு கலாச்சாரம்’ என்ற சொல் மலேசிய பண்பாட்டுக் கூறுகளுக்கும் மதிப்புகளுக்கும் முரணான அம்சங்களையே குறிக்கிறது…
மாறாக, நாட்டிலுள்ள எந்த கலாச்சாரத்தையும் அல்ல என UTM தெளிவுப்படுத்தியது.
பன்முகத் தன்மையையும் ஒற்றுமையையும் தாங்கள் எப்போது மதிப்பதாகவும், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப செயல்படுவதாகவும் அது கூறியது.
முன்னதாக UTM வெளியிட்ட சுற்றறிக்கை, கலப்பு பாலின நிகழ்ச்சிகளைத் தடைச் செய்ததுடன், இசை “மென்மையான, மலாய் தன்மை கொண்ட” தாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
அதே சமயம் ‘வெளிநாட்டு கலாச்சார’ குழுக்கள், UTM துணை வேந்தரின் அனுமதிப் பெறாமல் பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவொரு பிற்போக்கான நடவடிக்கை என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கருத்து சுதந்திரத்தை வரவேற்பதாகக் கூறிய UTM நிர்வாகம், நல்லிணக்கச் சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளது



