
தும்பாட், பிப்ரவரி-22 – கிளந்தான், பாசீர் மாஸில் கல்யாண வீட்டொன்றில் புகுந்து 2,500 ரிங்கிட் அடங்கியக் கைப்பையுடன் கம்பி நீட்டிய மூதாட்டி, தும்பாட்டில் பெறப்பட்ட அதே போன்ற திருட்டுப் புகாரில் மீண்டும் கைதாகியுள்ளார்.
பாசீர் மாஸ் திருட்டுக்கான 4 நாள் தடுப்புக் காவல் வியாழக்கிழமை முடிந்த போது மீண்டும் கைதான 61 வயது அம்மாது, உடனடியாக தும்பாட் போலீஸ் தலைமையகம் கொண்டுச் செல்லப்பட்டார்.
‘கூட்டுக் களவாணி’ என நம்பப்படும் அவரின் 60 வயது மதிக்கத்தக்கக் கணவரும் கைதானார்.
தும்பாட்டில் கடந்தாண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி அம்மூதாட்டிக்கு எதிராகப் புகார் பெறப்பட்டுள்ளது.
கல்யாண வீட்டில் விருந்தினர் போல் நுழைந்து, படுக்கையறைக்குள் அத்துமீறி 3,000 ரிங்கிட் ரொக்கம் அடங்கிய கைப்பையுடன் அவர் கம்பி நீட்டினார்.
அது தன் மனைவியின் கைப்பை என மணப்பெண்ணின் தந்தை அப்புகாரைச் செய்துள்ளார்.
ஆக, ஒரே மாதிரியான யுக்தியுடன் கல்யாண வீடுகளில் அம்மூதாட்டி பணத்தைத் திருடி வருவது தெரிய வருவதாக, தும்பாட் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Mohd Khairi Shafie தெரிவித்தார்
இதையடுத்து அம்மூதாட்டி 4 நாட்களுக்கும் அவரின் கணவர் 2 நாட்களுக்கும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பாசீர் மாஸ் கல்யாண வீட்டில் அவர் கைவரிசைக் காட்டிய வீடியோ வைரலான நிலையில், கடந்த வாரம் அவர் கைதானார்.