
கோலாலம்பூர், மார்ச்-13 – வெளிநாட்டுத் தொழிலாளர் கடத்தல் தொடர்பில் லஞ்சம் வாங்கியதன் பேரில் மலேசியா கினி செய்தியாளர் பி.நந்தகுமாருக்கு எதிராக MACC காட்டியுள்ள வேகம் ஆச்சரியமளிப்பதாக, பேராசிரியர் Dr பி.ராமசாமி கூறியுள்ளார்.
கைதாகி ஜாமீனில் வெளியான சில நாட்களிலேயே அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவுச் செய்துள்ளது.
முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட லட்சக்கணக்கான ரிங்கிட் ஊழல் புகார்களில் மெத்தனம் காட்டுவதாக விமர்சிக்கப்படும் MACC, நந்தகுமார் விவகாரத்தில் இத்தனை வேகத்தில் செயல்பட்டிருப்பது மலைக்க வைக்கிறது.
தான் லஞ்சம் வாங்கவில்லை என நந்தகுமார் வாதிடுகிறார்; அவர் சொல்வது உண்மையா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவுச் செய்யட்டும்.
அதை விடுத்து, அவர் குற்றமிழைத்தவர் என அரசாங்க அமுலாக்க நிறுவனங்களோ அல்லது பொது மக்களோ முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது என, உரிமைக் கட்சியின் தலைவருமான ராமசாமி சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், தனது பணியாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் முன்பே, மலேசியா கினி அவரை பணி இடநீக்கம் செய்திருப்பதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் வேறுவிதமாக நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி அல்ல.
ஆக, இவ்விஷயத்தில் வெளியாரின் தலையீடு அல்லது அழுத்தத்திற்கு மலேசியா கினி ஆளானதா என்ற சந்தேகமும் வலுக்கிறது.
நடப்பவற்றைப் பார்த்தால் முந்தைய அரசாங்கங்களை விட இந்த மடானி அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிகிறது.
வெளிப்படைத்தன்மையில் உண்மையிலேயே இந்த அரசாங்கம் தீவிரமாக இருந்தால், அமுலாக்க நிறுவனங்கள் பாரபட்சமின்றி செயல்படுவதையும், பத்திரிகையாளர்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படாமல் இருப்பதையும் உறுதிச் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு நந்த குமார் என்ற தனிநபரைப் பற்றியது மட்டுமல்ல; மாறாக மலேசியாவில் பத்திரிகை சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதிக்கான பெரியப் போராட்டத்தைப் பற்றியது.
அரசாங்கம், பத்திரிகையாளர்களை தேவையற்ற தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கத் தவறினால், அது ஜனநாயகத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் மேலும் சிதைக்கும் அபாயம் உள்ளது என Dr ராமசாமி நினைவுறுத்தினார்.
நந்தகுமார் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறது.