Latestமலேசியா

இந்திய இளம் பட்டதாரிகள் தன்முனைப்புடன் செயல்பட வேண்டும் – மாநாட்டில் வலியுறுத்து

ஜோகூர் பாரு, டிச 8 – ஜொகூர் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் அம்மாநில இளம் பட்டதாரிகளுக்கான மாநாடு அண்மையில் கிரேண்ட் பேரகன் விடுதியில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

இம்மாநாட்டில் ஜோகூரிலுள்ள இளம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள், எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான விழிப்புணர்வு, வாழ்வியல் கட்டமைப்பு முதலிய கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

ஜொகூர் மாநில ம.இ.கா.வுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அவ்வியக்கத்தின் தலைவர் கல்விச் செம்மல் நடராஜா சி.காளிமுத்து தமது தலைமையுரையில் தெரிவித்ததோடு இயக்கத்தின் எண்ணத்திற்கு ஏற்ப மாநில ம.இ.க இந்திய இளம் பட்டதாரிகளின் வளர்ச்சிக்கு கைகொடுப்பதையும் வரவேற்றார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப இளம் பட்டதாரிகள் தங்களது இலக்கை நோக்கிப் பயணிக்க இம்மாநாடு வழிகோலியது எனத் இம்மாநாட்டில் சிறப்புறை ஆற்றிய தொழிலதிபர் மு.இளங்கோ குறிப்பிட்டார்.

இளம் பட்டதாரிகள் தங்களுக்கான களத்தை அடையாளம் காணவும் இம்மாநாடு துணைநிற்கும் என அவர் மேலும் விவரித்தார்.

அரசு நிறுவனங்களான ஜொகூர் திறன் மேம்பாட்டு மன்றம், சேமநிதி வாரியம், ஜொகூர் தொழிலியச் சம்மேளனம், ஆகியவற்றுடன் மேலும் 14 தனியார் குழுமங்களும் இம்மாநாட்டில் தங்களது வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தின.

ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ம.இ.கா. தலைவருமாகிய ரவீன்குமார் அவர்களின் செயலாளர் சுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் நிகராளியாகக் கலந்துகொண்டு மாநாட்டின் இறுதியில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

தொழில்நுட்பம், அனைத்துலகக்கல்வி, போக்குவரத்து மேம்பாடு, வர்த்தகம், தொழிலியல், சுற்றுலா முதலிய துறைகளில் இருக்கும் வாய்ப்பினை நம்மின இளம் பட்டதாரிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்களது எதிர்காலத்தை உயர்நிலைக்கு இட்டுச் செல்ல ஆவன செய்ய வேண்டுமென சுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!