
கோலக்கிள்ளான், ஜனவரி-15, கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் தனது 40-வது நிறைவாண்டை அண்மையில் மாணிக்க விழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடியது.
ஜனவரி 11-ஆம் தேதி பண்டாமாரான் சீனப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் 1,000-கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வரவேற்புரையாற்றிய இயக்கத்தின் தலைவர் பூவாரசன் சிதம்பரநாதன், இந்த 40 ஆண்டுகளில் சமூக நலன் கருதி கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
14 தலைவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் கல்வி மேம்பாடு சார்ந்த பல நடவடிக்கைகளைத் திறம்பட நடத்தியும் வருகிறது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இராமசந்திரன் அப்பண்ணன், இயக்கத்தின் 40 ஆண்டுகால சேவையைக் கண்டு பெருமைப் படுவதாகக் கூறினார்.
இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளுக்கு நிதி சேர்க்கும் வண்ணம் நிதி திரட்டும் விருந்தோம்பலாகவும் நடைபெற்ற இந்த மாணிக்க விழாவுக்கு தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்ல்ஸ் சாந்தியாகோவும் சிறப்பு வருகைபுரிந்தார்.
தேசிய நிலையிலும் கோலக்கிள்ளானிலும் செயல்பட்டு வரும் பல இயக்கங்களின் தலைவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
சிறப்பம்சமாக மாணிக்க விழாவையொட்டி மாணிக்க மலரும் வெளியீடு கண்டது.
இயக்கத்தின் முன்னாள் தலைவர்களும் மூத்த உறுப்பினர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.