
நியூ யோர்க், செப்டம்பர்-19,
காசாவில் உடனடி மற்றும் நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு மன்றத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியத் தீர்மானத்தை, அமெரிக்கா மீண்டும் தனது இரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளது.
காசா போர் நிறுத்த விவகாரத்தில் அந்த உலக வல்லரசு இப்படி செய்வது இது ஆறாவது முறையாகும்.
மற்ற 14 நாடுகள் ஆதரித்திருந்தாலும், அமெரிக்கா தனது பங்காளி இஸ்ரேலை காக்கும் வகையில் அதனை எதிர்த்தது.
இந்தத் தீர்மானம் பிணைக் கைதிகளின் உடனடி விடுதலையையும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அத்தீர்மானத்தை நிராகரித்துப் பேசிய ஐநாவுக்கான இஸ்ரேலியத் தூதர் Danny Danon, “இந்த தீர்மானங்கள் பயங்கரவாதத்தை நிறுத்தாது. இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராகப் போராடத் தொடரும்” என்று சூளுரைத்தார்.
இஸ்ரேலியப் படைகள் காசா நகரில் தாக்குதலை அதிகரித்துள்ளதால் பொது மக்களின் துயரம் மேலும் மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில் தான் முதல் முறையாக, ஐநா விசாரணைக் குழுவும், 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்துள்ளது என குற்றஞ்சாட்டியிருந்தது.
ஆனால், இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும் அமெரிக்காவின் முடிவால் தடைப்பட்டுள்ளன.
இருந்தபோதும், அடுத்த வாரம் நியூ யோர்க்கில் நடைபெற உள்ள ஐநா பொதுப்பேரவையில் இது முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.