காஜாங், டிசம்பர்-6 – சிலாங்கூர், காஜாங், ஜாலான் ச’ம்ருட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாசலில், ஒரு பெண்ணை இரு ஆடவர்கள் கடத்தியதாகக் கூறப்படுவதை போலீஸ் மறுத்துள்ளது.
அது தொடர்பில் இதுவரை எவரும் புகார் செய்யவில்லையென, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் (Naazron Abdul Yusof) தெரிவித்தார்.
டிக் டோக்கில் வைரலான அவ்வீடியோக்கள் குறித்து விசாரணை நடத்தியதில், அது ஒரு கடத்தல் சம்பவமே அல்ல என உறுதியானது.
மாறாக, ஒரு கணவன் மனைவிக்கு இடையில் நிகழ்ந்த பிரச்னை என, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி வாயிலாகக் கண்டறியப்பட்டது.
எனினும், அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைத் கண்டறியும் விசாரணைக்காக, அத்தம்பதி மற்றும் அங்கிருந்த காரின் உரிமையாளரை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டுள்ளதாக நாஸ்ரோன் சொன்னார்.
முன்னதாக வைரலான வீடியோவில், பெண்ணொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், அவரை அடையாளம் தெரியாத ஆடவர் பிடித்து இழுப்பதையும் காண முடிந்தது.
இருவரையும், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரும் பொது மக்கள் சிலரும் அமைதிப்படுத்த முயன்ற வேளை, அதைப் பார்த்த வாகனமோட்டிகள் ஹாரனை அடித்துச் சென்றனர்.
சற்று நேரத்தில் அப்பெண்ணை காருக்குள் இழுத்துப் போட்டு விட்டு அவ்வாடவர் அங்கிருந்து கிளம்பினார்.