
காஜாங், ஜூலை-30- உடற்பயிற்சி பாடத்திற்கு வராமல் மட்டம் போட்டதாக திட்டியதால் சினமடைந்த இரண்டாம் படிவ மாணவன், ஆசிரியரைக் முகத்தில் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஜாங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நிகழ்ந்ததாக, பாதிக்கப்பட்ட 29 வயது ஆசிரியர் போலீஸில் புகார் செய்தார்.
திடலுக்கு ஏன் வரவில்லை என, ஆசிரியர் கேட்டதால் அதிருப்தியடைந்த 14 வயது அப்பையன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
அது கைகலப்பாக மாறி, ஒரு கட்டத்தில் ஆசிரியரை மிரட்டியவன் திடீரென அவரின் முகத்தில் ஓங்கிக் குத்தினான்.
சுற்றியிருந்த மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் இதனால் அதிர்ச்சியடைந்தனர். அதன் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இதையடுத்து காஜாங் வட்டாரத்தில் கைதுச் செய்யப்பட்ட அம்மாணவன், விசாரணைக்காக 2 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டான். இன்று காஜாங் நீதிமன்றத்தில் அவன் குற்றம் சாட்டப்படவுள்ளதாகவும் போலீஸ் கூறியது.