கோலாலம்பூர், டிசம்பர்-13 – காதலனுடன் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வதற்காக ‘சடங்கு சாமியாரின்’ உதவியை நாடிய இளம் பெண்ணொருவர், 18,300 ரிங்கிட் மோசடிக்கு ஆளாகியுள்ளார்.
கள்ள உறவைத் துண்டித்து தருவது, காதல் ஜோடிக்கு இடையில் வேறு யாரும் வராமல் பார்த்துக் கொள்வது போன்ற வசியங்களை செய்ய முடியுமென, தன்னைத் தானே சடங்கு மாஸ்டராக அறிவித்துக் கொண்ட நபரைப் பற்றிய சமூக ஊடகப் பதிவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்புதான் அப்பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது.
காதலன் தனக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில், அந்த ‘சடங்கு மாஸ்டரை’ அப்பெண் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.
ஆனால் கடைசி வரை ‘வசியத்துக்கு’ எவ்வளவு கட்டணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மாறாக, அப்பெண், அவரின் காதலன் இருவரின் பெயர்கள், புகைப்படங்கள், பிறந்த தேதிகள் போன்ற விவரங்களை மட்டுமே கேட்டு வாங்கினர்.
பிரச்னை எந்த அளவுக்கு மோசம் என்பதை கண்டறிந்த பிறகே வசியத்துக்கான கட்டணத்தை முடிவுச் செய்ய முடியுமென சாமியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிறகு புதுமுகம் ஒருவர் கைப்பேசிக்கு அழைத்து பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியதால் அப்பெண் பயந்துபோனார்.
காதலனுக்கே வசியம் வைக்கும் விஷயத்தை வைரலாக்கி விடுவோம் என அவர்கள் மிரட்டியதால், வேறு வழியில்லாமல் மோசடிக்கு அவர் அடிபணிந்தார்.
1,300 ரிங்கிட்டிலிருந்து 4,000 ரிங்கிட் என மொத்தமாக 18,300 ரிங்கிட்டை அவர் கட்டணமாகச் செலுத்தினார்.
அதோடு தனக்காக செய்யப்பட்ட சடங்குகளை நிறுத்தி விடுமாறும் கேட்டுள்ளார்.
ஆனால் மோசடி கும்பலோ, சடங்கை பாதியிலேயே நிறுத்தியதால் ‘மாஸ்டருக்கு’ உள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக படத்தை ஆதாரமாக அனுப்பி மேலும் 9,000 ரிங்கிட்டைக் கேட்டு வற்புறுத்தியுள்ளது.
இனியும் மோசடிக்காரர்களின் தொல்லை தாங்க முடியாத என்ற நிலைக்கு வந்து, அப்பெண் ஷா ஆலாம் மாநகர மன்ற உறுப்பினர் லிம் ஷு ச்செனின் (Lim Shu Chzen) உதவியை நாடியுள்ளார்.
மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டி, லிம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட அப்பெண் தனக்கு நேர்ந்தவற்றை பகிர்ந்துகொண்டார்.