
கிள்ளான், மார்ச்-13-கிள்ளான், கப்பாரில் கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஓர் ஆடவர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது, 49 வயது வியாபாரியான ஆர். கணேசலிங்கம், துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு மோட்டார் சைக்கிள் பயணிகளை தனது வாகனத்தால் மோதினார்;
அவர்களில் 33 வயது கே. தினேஷ் குமார் உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இன்று கிள்ளான் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கணேசலிங்கம் மீது கொலை குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டது.
கொலைக் குற்றம் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதால், அவரிடமிருந்து எந்தவிதமான ஒப்புதல் வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
தடயவியல் அறிக்கையைச் சமர்ப்பிக்க ஏதுவாக ஏப்ரல் 22-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருவதாக நீதிபதி அறிவித்தார்.
மார்ச் 5-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் Yamaha Y15 மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆடவர்கள், Kampung Perepat-டில் லாரி ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
பின்னர் அவ்விருவரையும் கணேசலிங்கம் தனது வாகனத்தால் மோதினார்; அதில் உயிரிழந்த ஆடவர் 23 குற்றப் பதிவுகளையும் காயமடைந்த நண்பர் 10 குற்றப்பதிவுகளையும் கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



