
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-18 – தனது கார் இழுத்துச் செல்லப்பட்ட கோபத்தில்,
MBJB எனப்படும் ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் இழுவை டிரக்குக்கு தீ வைத்த 31 வயது ஆடவர் கைதாகியுள்ளார்.
வியாழக்கிழமையன்று MBJB அமுலாக்க அதிகாரிகளால் அவரின் கார் இழுத்துச் செல்லப்பட்டது; அபராதம் கட்டி காரை மீட்க அவரிடம் பணமேதும் இல்லை.
இதையடுத்து மேல்முறையீடு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரைக் கூறிய போது, அது முடிய நீண்ட நாட்கள் பிடிக்குமே என அவர் அங்கலாய்ப்பு செய்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பெட்ரோலை கொண்டு வந்து MBJB-வின் இழுவை டிரக்கின் மீது ஊற்றி, தீ வைத்தார்.
இது CCTV கேமராவில் பதிவாகி வைரலானது.
இதையடுத்து அதே நாளில் அவ்வாடவர் கைதுச் செய்யப்பட்டதாக, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் கூறினார்.
செவ்வாய்க்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்நபர், தீ மூலம் நாசவேலையில் ஈடுபட்டதற்காக விசாரிக்கப்படுகிறார்.