
கூலாய், ஜனவரி-6 – ஜோகூரில், வெளிநாட்டு பதிவுப் பெற்ற வாகனத்திற்கு RON95 பெட்ரோல் நிரப்பி வைரலான ஆடவர், கூலாய் போலீஸாரிடம் தானாகவே சரணடைந்துள்ளார்.
மலேசியாவில் RON95 பெட்ரோல் அரசு மானியத்துடன் வழங்கப்படுவதால், அது மலேசியப் பதிவு பெற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
மானியங்கள் மலேசிய மக்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதியை இது வெளிப்படுத்துகிறது.
நிலைமை இப்படியிருக்க, சிங்கப்பூர் நாட்டவர் என நம்பப்படும் அவ்வாடவர் கார் பதிவு எண் பட்டையில் ‘S’ என்ற எழுத்தை மறைத்து, ஜோகூரில் உள்ள எண்ணெய் நிலையமொன்றில் RON95 பெட்ரோலை நிரப்பியது வீடியோவில் பதிவாகி வைரலானது.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பலர், மலேசியர்களுக்கான மானியத்தை மற்றவர் தவறாக பயன்படுத்துவதை கண்டித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
இந்நிலையால், சம்பந்தப்பட்டவரே சரணடைந்து, விசாரணைக்கும் ஒத்துழைப்பதாக போலீஸ் கூறியது.



