
ஈப்போ, டிசம்பர்-8 – பேராக், செமோரில் (Chemor) கால்நடைகளைப் புலி தாக்கி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களால் Bukit Bangkong குடியிருப்பாளர்கள் பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இதுவரை 2 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 விலங்குகள் காணாமல் போயிருக்கின்றன.
“பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற Bukit Bangkong-கில் 30 ஆண்டுகளில் புலிகள் நடமாட்டத்தையே கண்டதில்லை; இந்தத் திடீர் தாக்குதல் வட்டார மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என Bukit Bangkong சுற்றுச்சூழல் அழகுபடுத்தல் சங்கத் தலைவர் Lee Jun Man கூறினார்.
அத்தாக்குதல் சம்பவங்களுக்கு சில நாட்களுக்கு முன் புலி உறுமும் சத்தம் கேட்டதாக சில குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர்; ஆனால் அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றார் அவர்.
இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அச்சத்தம் வேறு விலங்குகளால் ஏற்பட்டிருக்கலாம் என முடிவுக்கு வந்தாலும், அண்மையத் தாக்குதல் சம்பவங்கள் அவ்வெண்ணத்தை மாற்றியுள்ளன.
இவ்வேளையில், சனிக்கிழமை வழக்கமான சோதனைக்காக மாட்டுக் கொட்டகைக்குக் சென்றபோது 7 மாடுகள் காணாமல் போனது கண்டு Abdul Rahman Sahul Hamid என்பவர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், கூரிய நகக் கீறல் காயங்களுடன் 2 மாடுகள் இறந்துகிடந்ததாகவும் 5 மாடுகளை இன்னும் காணவில் என்றும் போலீஸில் அவர் புகார் செய்தார்.
இந்நிலையில், ஞாயிறு காலை போலீஸ் மற்றும் PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு – தேசியப் பூங்காக்கள் துறை நடத்திய சோதனையில் அப்பகுதியில் சில இடங்களில் புலியின் புதியக் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து கேமரா கண்காணிப்புககளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.



