
ஸ்ரீநகர், மே 6 – பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அண்மைய கால விரோதப் போக்கினால் சுற்றுலா துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், சுற்றுப்பயணிகள் பலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோடினர். எல்லைப்பகுதிகளில் உள்ள இடங்களில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் சுற்றுப்பயணிகளையே நம்பியுள்ளது.
இதனிடையே, இதனால் ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க இந்திய காஷ்மீரில் உள்ள ஹோட்டல்களும் படகு வீடுகளும் 70 விழுக்காடுவரை தள்ளுபடியை வழங்கியுள்ளன.
அதே சமயத்தில் பாகிஸ்தான் பகுதியில் , போருக்கான சாத்தியங்கள் ஓங்கியுள்ளதால் அங்குள்ள சுற்றுலா தளம் ஒன்று மூடப்பட்டுள்ளது.
அண்மையில் அப்பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்தது மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்த போர் நிறுத்தம் அப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கு துணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு காஷ்மீரின் இந்தியப் பகுதிக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப் பயணிகள் வருகை புரிந்த வேளையில் பாகிஸ்தான் பகுதிக்கோ கிட்டத்தட்ட 1.5 மிலில்யன் பேர் விடுமுறையைக் கழிக்க வந்தனர்.
இதனால் இந்திய கட்டுப்பாட்டிலான காஷ்மீரில் இந்த ஆண்டு கோடைக்காலத்தின் தொடக்கத்தில் ஹோட்டல்கள், படகு வீடுகள் மற்றும் டாக்சிகள் சுற்றுப்பயணிகளால் நிரம்பி வழிந்தன..
ஆனால் தற்போது பலர் தங்களது முன்பதிவை ரத்துச் செய்துவிட்டதால் அங்கு நிலைமை வெறிச்சோடிக் கிடக்கிறது. உள்ளூர் வாசிகளின் வாழ்வாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணிகள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. அதன் மீது தொடர்ச்சியான அரசதந்திர மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளையும் இந்தியா அறிவித்துள்ளது.
ஆனால் அந்த தாக்குதலுக்கு தங்களுக்கு தொடர்பு இல்லையென பாகிஸ்தான் மறுத்ததோடு , பதிலடி நடவடிக்கைகளை வெளியிட்டு மற்றும் இந்தியாவின் உடனடி இராணுவத் தாக்குதல் குறித்து எச்சரித்துள்ளது.
தற்போது எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கு இடையிலான மோதல்கள் காஷ்மீரில் பதட்டநிலையை மேலும் மோசமாக்கியுள்ளன.