
பண்டார் பாரு, நவம்பர் 19 – பண்டார் பாரு கம்போங் சுங்கை தெங்காஸிலுள்ள தனது வீட்டருகே உள்ள கிணற்றில் அசைவு ஏற்பட்டதைக் கண்டறிந்த 31 வயது ஆடவர், முதலில் அதனைப் ‘பேய்’ என நம்பி பயந்திருக்கின்றார்.
ஆனால் அருகில் சென்று பார்த்தபோது, கிணற்றில் விழுந்து சிக்கித் தவித்து கொண்டிருந்தது ஒரு மாடு என்பதை அவர் பின்புதான் உணர்ந்திருக்கின்றார். உடனே அவர் APM, அதாவது பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை அழைத்து தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார்.
அந்த ஆடவரிடமிருந்து அழைப்பு கிடைக்கப்பெற்றவுடனேயே சுமார் 10 நிமிடங்களுக்குள் APM குழுவினர் சம்பவ இடத்தை வந்தடைந்தனர் என்று மாவட்ட APM அதிகாரி ‘ Leftenan (PA) Abdul Rahim Khairudin’தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்ற போது மாடு முழுவதும் நீர் நிரம்பிய கிணற்றில் நின்ற நிலையில் சிக்கியிருந்தது என்று கூறப்பட்டது.
கயிறுகளைப் பயன்படுத்தி சுமார் 30 நிமிட முயற்சிக்குப் பிறகு APM குழுவினர் அம்மாட்டை வெற்றிக்காரமாக மீட்டெடுத்தனர். மாடு பயந்து துடித்தால் மீட்பு பணி கடினமாகும் என்பதால் அவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மீட்பு பணி வேலைகள் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் முடிவடைந்தது.



