கிள்ளான் ஆற்றில் நீர் பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்ட ஆடவரை தேடும் பணி இன்று காலை தொடங்கியது

கோலாலம்பூர், நவ 18 – சலோமா சந்திப்புக்கு அருகே கிள்ளான் ஆற்றில் நேற்று மாலை நீர் பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்ட இந்திய ஆடவர் ஒருவரை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்று காலை மணி 9.30 க்கு தொடங்கியது.
ஒரு பாலத்திற்கு அருகே குழாய் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த ஆடவர் நேற்று மாலை 5.30 மணியளவில் தனது வாகனத்தை வெளியேற்ற விரும்பியபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீடபுத் துறையின் நடவடிக்கை மையம் தெரிவித்தது.
வலுவான நீரோட்டம் மற்றும் இருள் சூழ்ந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று இரவு 11 மணிக்கு தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை நிறுவத்தப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சசாலி ஆடம் ( Sazalee Adam ) தெரிவித்தார்.
பாலத்தின் அடியில் மொத்தம் 13 பேர் இருந்தனர், அந்த பகுதியில் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்களில் குழாய் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் மேலும் உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மீட்கப்பட்டனர்.
காணாமல்போன மற்றொரு ஊழியர் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. போலீஸ், தீயணைப்புத்துறை மற்றும் இதர நிறுவனங்களைக் கொண்ட தேடும் மற்றும் மீட்புக் குழு தனது பணியை இன்று காலையில் தொடங்கியது.
முன்னதாக, சலோமா சந்திப்பு அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஊடகங்கள் இதற்கு முன் செய்தி வெளியிட்டன. சம்பவம் நடந்த நேரத்தில், அந்த இடத்தில் 13 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகவும், அவர்களில் ஏழு இந்தோனேசியர்கள், நான்கு வங்கதேசத்தினர் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 12 பேர் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.



