கிள்ளான், அக்டோபர்-8 -கிள்ளான், பண்டமாரானில் இந்திய வர்த்தகரின் பங்களா வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில், இதுவரை ஒரு பெண் உள்ளிட்ட 10 பேர் கைதாகியுள்ளனர்.
23 முதல் 46 வயதிலான அவர்களில், அக்கொள்ளை கும்பலின் தலைவனும் அடங்குவான்.
கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலான் மந்தினில் அவர்கள் கைதானதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
கொள்ளையிடுவதோடு நிறுத்தாமல் காயங்களை ஏற்படுத்திச் செல்லக் கூடிய
மிகவும் அபாயகரமான அக்கும்பலை கடந்த ஓராண்டாகவே தேடி வந்தோம் என்றார் அவர்.
30 வயதிலான அக்கும்பலின் தலைவனுக்கே, 2 கொலைச் சம்பவங்கள், ஒரு கொலை முயற்சி உட்பட மொத்தம் 14 குற்றப்பதிவுகள் இருக்கின்றன.
குண்டர் கும்பல் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் வெளியிலிருக்கும் எஞ்சியவர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரு கார்களில் வந்த 10 முதல் 12 பேரைக் கொண்ட அக்கும்பல், அந்த பங்களா வீட்டில் சுவரேறி குதித்து ரொக்கம், தங்க நகைகள், சாமிச் சிலைகள் என 600,000 ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றது.