
கோலாலம்பூர், டிசம்பர்-20, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில்
செயல்பட்டு வந்த அனைத்துலக போதைப்பொருள் விநியோக
கும்பலை போலீஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்நடவடிக்கையில் RM1.53 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது மலேசிய வரலாற்றிலேயே மிகப் பெரிய பறிமுதலாக கருதப்படுகிறது.
செராஸ் மற்றும் காஜாங்கில் மேற்கொள்ளப்பட்ட 4 சோதனைகளில் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட 3 உள்ளூர் ஆடவர்களும் 3 வெளிநாட்டு பெண்களும் கைதுச் செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
சட்டவிரோத தயாரிப்புக் கூடமாக செயல்பட்டு வந்த 3 மாடி பங்களா வீடு, வணிகத் தளங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
MDMA, கொக்கேய்ன், கெத்தாமின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் அவற்றைத் தயாரிக்கும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்கள் 8.5 மில்லியன் மக்களை பாதிக்கக்கூடியவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவை, அனைத்துலகச் சந்தைக்கு போதைப்பொருளை அனுப்பும் மையமாக உருவாக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் முதல் அக்கும்பல் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது.
சந்தேக நபர்கள் அனைவரும் டிசம்பர் 23 வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மரணத் தண்டனை அல்லது பிரம்படியுடன் கூடிய ஆயுள் தண்டனை கிடைக்க வகை செய்யும் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.



