
கிள்ளான், ஜனவரி-28 – கிள்ளான் அரச மாநகரத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக வீற்று அருளாட்சி செய்து வருவது தான் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் என அழைக்கப்படும், கம்போங் ஜாவா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயமாகும்.
இந்த ஆலயம், மின்சார அறவாரிய தொழிலாளர்களால் நிறுவப்பட்டு இன்று பிரமாண்டமான ஆலயமாக திகழ்கிறது.

இந்நிலையில், பிரசித்திப் பெற்ற இந்த ஆலயத்தின் மூன்றாவது மஹா கும்பாபிஷேகம் இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடைபெற்ற இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற்றனர்.
கும்பாபிஷேகத்துடன் அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.


சிறப்பு வருகையாக, சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டனர்.
இருவரும் கும்பாபிஷேகம் குறித்தும் கருத்துரைத்ததோடு புனரமைக்கப்பட்ட கோயிலின் அழகையும் பாராட்டினர்.
ஆரம்பக் காலத்தில் இக்கோயில் நிர்மாணிப்புக்கு அப்போதைய ம.இ.கா தலைவர் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தொடங்கி இன்றையத் தலைவர்கள் வரை அனைவரும் உறுதுணையாக இருந்து வருவதாக, ஆலயத் தலைவர் எஸ். கந்தசாமி தெரிவித்தார்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய ராஜகோபுரம் அழகிய வர்ணம் தீட்டப்பட்டு பக்தர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



