
கோலாலம்பூர், பிப்ரவரி 6 – குடியிருப்பு பகுதியில் பின்சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அண்டைவீட்டின் வேலியில் மோதிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று அறியப்படுகின்றது.
DashCam Malaysia முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், ஒரு வீட்டிலிருந்து பின்சென்ற வெள்ளை நிற Perodua Viva கார், ஓட்டுநரின் கவனக்குறைவால் திடீரென வேகமெடுத்து அருகிலிருந்த வேலியில் மோதியதாக தெரிகிறது.
மோதலின் காரணமாக அந்த வேலி இடிந்து, அதன் உடைந்த பகுதிகள் அண்டைவீட்டு வளாகத்திற்குள் விழுந்தன. விபத்துக்குப் பின்னர், ஓட்டுநர் மெதுவாக தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற விபத்துகள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தானியங்கி வாகனங்களை இயக்கும் போது பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்தும் சம்பவங்கள் ஏற்படலாம் என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம், குடியிருப்பு பகுதிகளில் வாகனம் இயக்கும் போது அதிக கவனமும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதை உணர்த்துகிறது.



