துபாய், ஜனவரி-12, “எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், குடும்பத்தை கவனியுங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள்” என பிரபல நடிகர் அஜீத் குமார் தனது இரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
துபாய் கார் பந்தய பயிற்சியில் விபத்தில் சிக்கியப் பிறகு அவர் வெளியிட்டுள்ள முதல் வீடியோ இதுவாகும்.
கார் பந்தயம் தனது வாழ்க்கையோடு கலந்த ஒன்று எனக் குறிப்பிட்ட அஜீத், துபாயில் பந்தயத்தை காண ஏராளமான இரசிகர்கள் நேரில் வந்தது குறித்தும் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
அது தம்மை மிகவும் நெகிழச் செய்தாலும், இரசிகர்கள் தங்களைப் பற்றியும் யோசிக்க வேண்டும் என்றார் அவர்.
மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்றும், வேலை செய்பவர்கள் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டுமென்றும் அஜீத் தன்முனைப்பு வார்த்தைகளைக் கூறினார்.
பிடித்த விஷயத்தை செய்யும் போது அதில் வெற்றிக் கிடைக்காவிட்டால், சோர்ந்து போய்விடக் கூடாது.
போட்டி முக்கியமல்ல, மன உறுதியும் வேட்கையும் அர்ப்பணிப்புமே முக்கியமாகும்.
அவற்றை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதீர்கள் என அஜீத் பேசியுள்ளது அவரின் தீவிர இரசிகர்களை புல்லரிக்கச் செய்துள்ளது.
சினிமாவுக்கு வெளியே இரசிகர்கள் தன் பின்னால் வருவதை விடுத்து, தத்தம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்பதை பல முறை பதிவுச் செய்து, அதை செய்தும் காட்டி வருவதாக, வீடியோவைப் பார்த்த அஜுத் இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் வீடியோ வெளியிட்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.