
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-25-குடும்ப வன்முறை புகாரில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர், அச்செயலுக்காக முதல்வர் Chow Kon Yeow-விடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும் அப்புகாரை கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அவர், போலீஸ் விசாரணைக்கே விட்டு விடுவதாக சொன்னார்.
தமக்குத் தெரிந்த வரையில், அது, சம்பந்தப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் அவரின் மனைவிக்கும் இடையிலான குடும்ப தகராறு என்றும், இருவரும் தனித்தனியாக போலீஸ் புகார்களை செய்து விட்டு பின்னர் மீட்டுக் கொண்டதாகவும் Kon Yeow கூறினார்.
அந்த ஆட்சிக் குழு உறுப்பினர் போலீஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்; இனி மேற்கொண்டு எதனையும் அவர் தான் பேச வேண்டும் என முதல்வர் சொன்னார்.
விசாரணை முடியும் வரை அந்நபர் விடுப்பில் செல்ல வேண்டுமா என கேட்டதற்கு, அது அவரின் முடிவு என்றும் Kon Yeow சொன்னார்.
மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் போலீஸ் புகார் வைரலான நிலையில், நேற்று காலையில அந்த ஆட்சிக் குழு உறுப்பினர் கைதானதாகவும் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.



