
புது டெல்லி, ஜனவரி-26 – இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவை ஒட்டி பிரபல நடிகர் அஜீத் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக அஜீத் அவ்விருதைப் பெறுகிறார்.
பாரத ரத்னா, பத்ம விபூஷன் ஆகியவற்றுக்கு அடுத்து இந்திய அரசாங்கத்தின் மூன்றாவது மிக உயரிய விருது இதுவாகும்.
இந்திய அதிபரின் கையால் பத்ம பூஷன் விருதைப் பெறப் போவது பெரும் கௌரவம் என அஜீத் வருணித்துள்ளார்.
தேசத்திற்கு தான் ஆற்றியப் பங்களிப்பு அங்கீகரிப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேலும் உத்வேகம் பெற்று, நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து சேவை செய்ய தாம் கடமைப்பட்டுள்ளதாக, அறிக்கையொன்றில் அவர் சொன்னார்.
கடந்த வாரம் துபாய் கார் பந்தயத்தில் வெற்றி, இந்த வாரம் பத்ம விருது அறிவிப்பு என அஜீத்துக்கு ஏறுமுகமாக இருப்பதால், அவரின் தீவிர இரசிகர்கள் வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இவ்வேளையில், அதே கலைத்துறை சேவைக்காக நடிகையும் நாட்டியத் தாரகையுமான ஷோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விருதைப் பெறும் மற்றொரு முக்கியமானவர் மூத்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஆவர்.
இவ்வேளையில் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வாங்குவோரில் குக் வித் கோமாளி புகழ் சமையல் கலைஞர் Chef தாமு எனப்படும் தாமோதிரனும் அடங்குவார்.