
மலாக்கா, ஆகஸ்ட் 22 – இரண்டு கடைகளிலிருந்து 1,826.10 ரிங்கிட் மதிப்பிலான குழந்தைகள் குடிக்கும் 11 பால் மாவு பெட்டிகளை திருடிய 32 வயதான பகுதி நேர ஏர் கண்டிஷனிங் ஊழியர் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்பு அந்த ஆடவன், நீதிபதியின் முன் தனது குற்றத்தை மறுத்துள்ளார்.
ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் 99 ஸ்பீட்மார்ட் தாமான் பாயா எமாஸ் மற்றும் 99 ஸ்பீட்மார்ட் பண்டார் பாரு சுங்கை உடாங்கிலிருந்து 11 பால் மாவு பெட்டிகளை அந்நபருடன் சேர்ந்து மேலும் இருவர் திருடியதாகக் கூறப்படுகிறது.
தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த இக்குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உத்தரவாதத்துடன் கூடிய 4,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கி, தற்காலிக விடுதலை அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.