
கோலாலம்பூர், பிப்ரவரி-9-கோலாலாம்பூர், ஜாலான் துன் ரசாக் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, 2 வயது குழந்தை திடீரென கார் கதவைத் திறந்ததால், 6 வாகனங்கள் மோதிக் கொள்ள நேர்ந்தது.
வெள்ளிக் கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் பின்புற இருக்கையில் உறவினரின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை, திடீரென கதவைத் திறந்தது.
இதனால் அப்போது நடுப்பாதையில் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி கார் கதவில் மோதி, இன்னொரு வாகனத்தில் மோதி சாலையில் விழுந்தார்; 25 வயது அவ்வாடவருக்கு அதில் கை எலும்பு முறிந்தது.
பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியால், முன்னே விழுந்த மோட்டார் சைக்கிளோட்டியுடன் மோதுவதைத் தவிர்க்க இயலவில்லை; அவரும் கீழே விழுந்து சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளானார்.
மோதலைத் தவிர்க்க முயன்ற மேலும் 4 வாகனங்கள் இதில் பாதிக்கப்பட்டன; எனினும், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
விபத்தை ஏற்படுத்தியக் காரில் குழந்தைகள் பாதுகாப்புக் கதவு (child safety lock) பூட்டப்படவில்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



