கோலாலம்பூர், பிப்ரவரி-5 – டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் உத்தரவு சர்ச்சையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரச துரோகம் புரிந்திருப்பதாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது.
எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் முன் வைத்துள்ள அக்குற்றச்சாட்டு, அடிப்படையற்றது மட்டுமல்ல, தீய நோக்கத்தைக் கொண்டது என, அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவான BBC சாடியது.
நஜீப்பின் வீட்டுக் காவல் தொடர்பில் அப்போதைய மாமன்னர் கூடுதல் உத்தரவு வெளியிட்டது உண்மைதான்; ஆனால் அது தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை; மாறாக தேசிய சட்டத் துறைத் தலைவரிடமே ஒப்படைக்கப்பட்டது.
அதற்கும் பிரதமர் என்ற முறையில் தமக்கும் சம்பந்தமில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளார்; இருந்த போதிலும், மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் நோக்கில் அவ்விவகாரத்தில் எதிர்கட்சிகள் உண்மையைத் திரித்துக் கூறுகின்றன.
பிரதமர் அரச துரோகம் இழைத்து விட்டார் என்றும், எனவே முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் நுழைய மாட்டார்கள் என்றும் கூறுவதெல்லாம் அடிப்படையற்ற வீண் பேச்சே; முதலீட்டாளர்களின் முடிவு பொருளாதார நிலைத் தன்மை மற்றும் அவர்களுக்குத் தோதுவானக் கொள்கைகளைச் சார்ந்தே இருக்கும்.
ஹம்சா கூறிக் கொள்வது போல் நடைமுறைக்கு புறம்பான அரசியல் அவதூறுகளால் அல்ல என BBC இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
எதிர்கட்சித் தலைவரின் பொறுப்பற்றச் செயல், அரசாங்கத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும்; அனைத்துலக அளவில் நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும்.
பிரதமராக இருக்கும் காலத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் மலாய் ஆட்சியாளர்களுக்கு உரிய மரியாதையை வழங்கி வந்துள்ளார்; தொடர்ந்து வழங்கி வருகிறார்.
எனவே, மக்களை உசுப்பேற்றி வெறுப்பு அரசியலை விதைக்கும் எதிர்கட்சியினரின் முயற்சியை மக்கள் நிராகரிக்க வேண்டுமென BBC கேட்டுக் கொண்டது.