Latestமலேசியா

கூலிமில் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர் அத்துமீறல் புகாரில் கைது; ஊடகங்கள் கண்டனம்

கூலிம், மார்ச்-31-கெடா கூலிமில், கள்ளக் குடியேறிகள் குறித்து செய்தி சேகரித்ததாக கூறப்படும் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி ஊடகத்தின் செய்தியாளர் காளிதாஸ் சுப்ரமணியம், வாக்குமூலம் அளிக்க நேற்று கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையகம் சென்றபோது கைதுச் செய்யப்பட்டதை Thinathanti இயக்குநர் பவளசெல்வன் மாரிமுத்து வணக்கம் மலேசியாவிடம் உறுதிப்படுத்தினார்.

மார்ச் 26-ஆம் தேதி காளிதாஸ், இதர ஊடகத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளுடன் Kulim Hi-Tech Park சென்றிருந்தார்.

அங்கு 300-க்கும் மேற்பட்ட கள்ளக் குடியேறிகள் வேலை செய்து வருவதாகக் கூறப்படுவதை ஆய்வு செய்வதற்காகவே அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

“நாங்கள் ஒன்றும் வலைப்பதிவாளர்களோ, சமூக ஊடக பிரபலங்களோ கிடையாது. தகவல் இலாகாவின் அதிகாரப்பூர்வ ஊடக அட்டையுடன் பணியாற்றும் செய்தியாளர்கள். எனவே காளிதாஸ் கைதுச் செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது” என பவளசெல்வன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில், மேலும் 7 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதற்கிடையில், மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். முத்தமிழ் மன்னன், போலீஸாரின் இந்நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார்.

“செய்தி சேகரிக்கச் சென்றதற்காக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை” எனக் கூறிய அவர், காளிதாஸ் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Gerakan Media Merdeka ஊடக அமைப்பும் போலீஸ் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, காளிதாஸ் கைதுச் செய்யப்பட்டதை, சமூக ஆர்வலரும் கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ் சாந்தியாகோவும் கடுமையாக கண்டித்துள்ளார்.

கள்ளக் குடியேறிகள் குறித்து செய்தி சேகரித்ததற்காக கைது செய்வது, ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என அவர் தெரிவித்தார்.

இத்தகைய வழக்குகளில், அத்துமீறல் சட்டத்தை பயன்படுத்துவது பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார்.

காளிதாஸை உடனடியாக விடுவித்து, கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

இந்நிலையில், காளிதாஸ் இன்று விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பவளசெல்வன் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!